search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூர் தொழில் அதிபர்"

    பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர், பகவதி அம்மனுக்கு காணிக்கையாக 24 பவுன் எடை கொண்ட தங்க கனகமணி மாலையை காணிக்கையாக வழங்கி உள்ளார்.
    கன்னியாகுமரி:

    பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கையாக ரூபாய், தங்கம், வெளிநாட்டு பணம் என உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார்கள்.

    இந்தநிலையில் பெங்களூரைச் சேர்ந்த தொழில் அதிபர் முருகன், பகவதி அம்மனுக்கு காணிக்கையாக 24 பவுன் எடை கொண்ட தங்க கனகமணி மாலையை காணிக்கையாக வழங்கி உள்ளார்.

    நேற்று அந்த தங்க மாலை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் கோவில் மேலாளர் ஆறுமுக நயினாரிடம், தொழில் அதிபர் முருகன், தங்க மாலையை ஒப்படைத்தார். தொடர்ந்து அந்த மாலை பகவதி அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.

    நிகழ்ச்சியில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன், மேல் சாந்திகள் மணிகண்டன் போற்றி, பத்மநாபன் போற்றி, ராதாகிருஷ்ணன் போற்றி, விட்டல் போற்றி, வனஜா, விஜயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பகவதி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. 2-ம் திருவிழாவான நேற்று மாலை 6 மணிக்கு சமய உரை, 8 மணிக்கு பக்தி பஜனை, 9 மணிக்கு கிளி வாகனத்தில் தேவி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன.

    3-ம் திருவிழாவான இன்று காலை 5 மணிக்கு அபிஷேகம், 7 மணிக்கு அன்ன வாகனத்தில் தேவி வீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.

    8 மணிக்கு கன்னியாகுமரி வடக்கு தெரு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது.

    இன்று மாலை 6 மணிக்கு முருக பக்தர்கள் நடத்தும் பஜனை நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு அன்ன வாகனத்தில் தேவி திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

    ×